காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: பிரதமர் வீட்டின் முன் தமிழக முதல்வரும் போராட வர வேண்டும்: அய்யாக்கண்ணு
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்துக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றால் பிரதமர்
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்துக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றால் பிரதமர் வீட்டின் முன்பு விவசாயிகளுடன் இணைந்து தமிழக முதல்வரும் போராட வேண்டும் என தென்னிந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடைசெய்யக்கோரி, அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரியில் விவசாயிகள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர்.
இந்த பயணம் 75-ஆம் நாளாக திங்கள்கிழமை வேலூர் வந்தடைந்தது. அப்போது, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது:
விவசாயத்தைப் பாதுகாக்க தென்பெண்ணை ஆற்றில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பிவிட வேண்டும். பாலாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும், தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ள
ரூ. 1,000 கோடி நிதியைப் பயன்படுத்தி பாலாற்றில் தடுப்பணைகள் கட்டவும், ஏரி, குளங்களைத் தூர்வாரவும் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரியத்தில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அதிகாரமற்ற குழுவாக இருக்கக்கூடாது.
கர்நாடகத்திலுள்ள அனைத்து அணைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, முழு அதிகாரம் கொண்ட குழுவாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இதன்மூலம், நீதிமன்ற உத்தரவை அவமதித்து விட்டதாக மத்திய பொதுப்பணித் துறை, கர்நாடக முதன்மைச் செயலர், கர்நாடக பொதுப்பணித் துறை செயலர் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு தமிழகத்துக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றால், பிரதமர் வீட்டின் முன்பு விவசாயிகளுடன் இணைந்து தமிழக முதல்வரும் போராட வேண்டும் என்றார் அவர்.
சக்தி சேனா அமைப்பினர்
வாக்குவாதம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு சக்தி சேனா அமைப்பின் மாநில பொதுச்செயலர் ராஜகோபாலன் தலைமையில் சிலர் வந்தனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது எனக்கூறி, அய்யாக்கண்ணுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் சக்தி சேனா அமைப்பினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.