வேலூர்

கிராம மக்கள் எதிர்ப்பு: தனியார் குடிநீர் நிறுவனத்துக்கு "சீல்'

DIN

வாணியம்பாடி அருகே தனியார் குடிநீர் நிறுவனத்தின் அருகே உள்ள நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்ததற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, குடிநீர் நிறுவனத்துக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை "சீல்' வைத்தனர்.
வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி ஊராட்சியில் தனியார் குடிநீர் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் அருகே உள்ள விவசாய நிலத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு தோண்டினர். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு சென்று, கிராமப் பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவி வரும் நிலையில், ஆழ்துளைக் கிணற்றை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் நேரில் விசாரித்தனர். மேலும் நாட்டறம்பள்ளி வருவாய்த் துறை மற்றும் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, அவர்களிடம் அங்கிருந்த பொதுமக்கள் தனியார் நிறுவனத்துக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது, இதனால் தங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், எனவே அந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்றனர். இதையடுத்து, நிலத்தின் உரிமையாளரிடமும், தனியார் குடிநீர் நிறுவனத்திலும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரித்தனர்.
இந்நிலையில், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், வருவாய் ஆய்வாளர் சிவநேசன், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலையில், குடிநீர் நிறுவனத்துக்கு திங்கள்கிழமை "சீல்' வைத்து மூடினர். 
அப்போது தனியார் குடிநீர் நிறுவன உரிமையாளரின் உறவினர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT