வேலூர்

ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

DIN

நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கிராம மக்களுடன் இணைந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
கூத்தாண்டகுப்பம் ஊராட்சி, சஞ்சீவனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் புத்துக்கோயில், பாலன்வட்டம், சாவடிவட்டம், ஜீவாநகர், சஞ்சீவனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒன்றாம் முதல் எட்டாம் வகுப்பு வரை 150-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் தலைமையாசிரியராக கிரிஜா என்பவரும் உதவி ஆசிரியர் உட்பட 3 பேரும் பணியாற்றி வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர் இல்லாததால் சரிவர பாடம் நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் இப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் கடந்த 15 நாள்களாக மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். 
பள்ளியில் குடிநீர் இல்லாததால் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் புத்தகப்பையுடன் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வர வேண்டியுள்ளது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை புதிய ஆசிரியர்களை நியமிக்கவும், குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்களின் பெற்றோர்கள், கல்வி அதிகாரிகளிடமும், தலைமையாசிரியரிடமும் பலமுறை மனு அளித்தனர். எனினும், கல்வி அதிகாரிகள்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பொது மக்கள் செவ்வாய்க்கிழமை காலையில் இப் பள்ளியை முற்றுகையிட்டனர். புதிய ஆசிரியர்களை நியமிக்கவும், பள்ளியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து, கிராம மக்களுடன் இணைந்து, ஏரிக்கரை அருகே மல்லகுண்டா-சஞ்சீவனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பள்ளியின் நுழைவுவாயில் கேட்டை இழுத்து மூடி பள்ளிக்கு எதிரே சாலையில் அமர்ந்து மாணவர்களுடன் பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து, ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ருத்ரப்பா, கனகராஜ் மற்றும் கல்வி அதிகாரிகள் கோமதி, கமலநாதன் உட்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், பள்ளிக்குப் புதிதாக ஆசிரியர்களை நியமிக்கும் வரை தற்காலிகமாக வேறு பள்ளிகளில் இருந்து இரண்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின், மாணவ, மாணவிகளும் வகுப்பறைகளுக்குச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT