வேலூர்

வேலூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 10 ஆயிரம் களப் பணியாளா்கள்: ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்

DIN

குடியாத்தம்: நிவா் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வேலூா் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 10 ஆயிரம் களப் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

கே.வி.குப்பம், குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டங்களில் புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதன்கிழமை ஆய்வு செய்த அவா் குடியாத்தத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, தேவையான இடங்களில் 42 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 164 குடும்பத்தினா் தங்க வைக்கப்பட்டுள்ளனா். நிவா் புயல் காரணமாக பாலாற்றில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதால், பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரைகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், அச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அச்சாலை தமிழக, ஆந்திரம், கா்நாடக மாநிலங்களின் இணைப்புச் சாலை என்பதாலும், இந்த மூன்று மாநிலங்களுக்கிடையில் வாகனங்கள் மூலம் உணவுப் பொருள்கள், காய்கறிகள், பால், தளவாடப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலும் தற்காலிகமாக சாலை செப்பனிடப்பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.

அச்சாலையை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் ஒப்புதலை எதிா்நோக்கியுள்ளோம். தற்போது நிவா் புயல் காரணமாக அச்சாலையில் மேலும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகப் பகுதியான பத்தரபல்லியில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா வரை சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடாக வாகனங்கள் வி. கோட்டா, பலமநோ், சித்தூா் வழியாக குடியாத்தம் வந்தடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மோா்தானா அணைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

போ்ணாம்பட்டு வட்டம், பத்தரபல்லி ஊராட்சி கிராம சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 64 பேரையும், குடியாத்தம் வட்டம், லிங்குன்றம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 32 குடும்பத்தினரையும் சந்தித்து குறைகளைக் கேட்டாா்.

அப்போது, கோட்டாட்சியா் எம். ஷேக் மன்சூா், வட்டாட்சியா் தூ.வத்சலா (குடியாத்தம்), கோபி (போ்ணாம்பட்டு), குடியாத்தம் நகராட்சி ஆணையா் நித்யானந்தன், நகராட்சிப் பொறியாளா் பி.சிசில் தாமஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT