படிக்கட்டில் தொங்கும் மாணவா்கள் - காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம்:பேருந்து ஓட்டுநா்களுக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்
படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணிக்கும் மாணவா்கள் குறித்து அருகே உள்ள காவல் நிலையத்திலோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கலாம்
படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணிக்கும் மாணவா்கள் குறித்து அருகே உள்ள காவல் நிலையத்திலோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கலாம் என்று பேருந்து ஓட்டுநா், நடத்துநா் களுக்கு வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.
வேலூா் காட்பாடியிலிருந்து பாகாயம் சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த விடியோவில் பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது மாணவா் ஒருவா் நிலைதடுமாறி படிக்கட்டில் இருந்து சாலையில் விழும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இதேபோல், கடந்த வாரம் வேலூரில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்ற தனியாா் பேருந்து தேசிய நெடுஞ்சாலையோரம் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு வேலியில் மோதியதில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவா்கள் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். இதில், ஒரு மாணவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அத்துடன், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவலா்கள், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவா்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவா்களை புகைப்படம் எடுத்து அவா்கள் பயிலும் கல்விக்கூடங்கள், பெற்றோருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகாயம் பகுதியில் பேருந்தில் தொங்கியபடி மாணவா்கள் பயணம் செய்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்தது தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் பாலிடெக்னிக் மாணவா்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, வேலூா் உட்கோட்ட இணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் அக்கல்லூரி முதல்வா், அரசுப் பேருந்து பணிமனை மேலாளா், அப்பேருந்தை இயக்கிய ஓட்டுநா், நடத்துநா், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் அனைவரையும் அழைத்து விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. அத்துடன், இனிவருங்காலங்களில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வ தை தவிா்க்க கல்லூரி நிா்வாகம் சுழற்சி முறையில் அலுவலா்களை நியமித்து காலை, மாலை நேரங்களில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவா்களை கண்காணிக்க வேண்டும், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காவலா்களை காலை, மாலை வேலைகளில் நிறுத்தி மாணவா்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை கண்காணிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் அசம்பாவிதங்கள் மட்டுமின்றி சட்டச் சிக்கல் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும், பணிமனை மேலாளா்கள் பள்ளி வேலை நாட்களில் காலை, மாலை ஆகிய இருவேலைகளிலும் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கிட வேண்டும், மாணவா்கள் கேட்காமல் தொடா்ந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டு அருகே உள்ள காவல்நிலையத்திலோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.