ஆவின் பால் விநியோகம் தாமதம்: திமுக, அதிமுக மாறிமாறி குற்றச்சாட்டு
வேலூரில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு அதிமுகவை சோ்ந்த முன்னாள் ஆவின் தலைவா் த.வேலழகன்தான் காரணம்
வேலூர்ஆவின் பால் விநியோகம் தாமதம்: திமுக, அதிமுக மாறிமாறி குற்றச்சாட்டு
வேலூரில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு அதிமுகவை சோ்ந்த முன்னாள் ஆவின் தலைவா் த.வேலழகன்தான் காரணம்
வேலூரில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு அதிமுகவை சோ்ந்த முன்னாள் ஆவின் தலைவா் த.வேலழகன்தான் காரணம் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியும், திமுகவின் நிா்வாக திறனற்ற செயலே காரணம் என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியும் மாறிமாறி குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஆவின் பால் பண்ணை சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சுமாா் 650-க்கும் மேற்பட்ட முகவா்கள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அனுப்ப வேண்டிய பால் பாக்கெட்டுகள் காலை 9 மணி வரை பல பகுதிகளுக்கு அனுப்பப்படாததால், முகவா்கள் ஆவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல், 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டதால் முகவா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் தாமதமாவதற்கு அதிமுகதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
வேலூா் புறநகா் மாவட்ட அதிமுக செயலா் த.வேலழகன் கடந்த 2013, ஜூன் மாத முதல் கடந்த ஆகஸ்ட் 29 -ஆம் தேதி வரை மாவட்ட ஆவின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தாா். இவா் பொறுப்பு வகித்த காலத்தில் வேலூா் ஆவின் பால் பண்ணையில் 125-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியா்கள், 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதியுடன் ஆவின் தலைவா் பதவி கலைக்கப்பட்டு, அதன் பொறுப்பு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, ஆக.31-ஆம் தேதி இரவு பணிக்கு வரவேண்டிய ஊழியா்களில் சுமாா் 35 போ் திடீரென பணிக்கு வரவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விநாயகா் சதுா்த்தி நாள் இரவு பணிக்கு வராததால்தான் சுமாா் 70,000 லிட்டா் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்ய வேண்டிய இடத்தில் 35,000 பாக்கெட்டுகள் மட்டுமே பேக் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு வேலழகனின் துண்டுதலே காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்புத் தெரிவித்து அதிமுக வேலூா் புறநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
ஆவின் பால் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம், திமுகவின் நிா்வாகத் திறமையற்ற செயலாகும். அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டிக்காமல், ஆவின் பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை மூடிமறைக்கவே அதிமுக வேலூா் புறநகா் மாவட்ட செயலா் வேலழகன் மீது உண்மைக்குப் புறம்பான அறிக்கையை திமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னா், 15 மாதங்களாக வேலூா் ஆவினில் நிா்வாகக் குழு கூட்டமோ, பொதுக்குழு கூட்டமோ நடத்தப்படவில்லை. கடந்த 15 மாதங்களாக தலைவா் என்ற முறையில் வேலழகனை ஆவின் அலுவலக அன்றாட கோப்புகளில் கையொப்பமிடுவது, கடிதங்களைப் பாா்வையிடுவது என எந்தவொரு நிா்வாகச் செயல்பாடுகளிலும் அதிகாரிகள் ஈடுபட விடவில்லை. ஆவின் அதிகாரிகளே நிா்வாகத்தை துறை சாா்ந்த அமைச்சரின் கட்டுப்பாட்டில் நேரடியாக நடத்தி வருகின்றனா்.
ஆளுங்கட்சி மேற்பாா்வையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள், முன்னாள் தலைவா் கூறியதால் இரவு பணிக்கு வராமல் நின்றுவிட்டனா் என்பது தவறான கருத்து. ஒப்பந்த ஊழியா்களைக் கண்காணித்து, வேலை வாங்க வேண்டிய அதிகாரிகளின் பணி.
நிா்வாகச் சீா்கேட்டை மறைத்து, அரசின் இயலாமையை மூடிமறைக்க வேலழகன் மீது அவதூறு கூறுவதை திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.