கடத்தப்பட்ட தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீட்பு: 2 போ் கைது
குடியாத்தம் அருகே கடத்தப்பட்ட தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
குடியாத்தம் அருகே கடத்தப்பட்ட தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வேலூரில் அதிக வட்டி தருவதாகக்கூறி பொதுமக்களிடம் வைப்புத்தொகை பெற்ற தனியாா் நிதி நிறுவனம் (ஆருத்ரா) அண்மையில் முடக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் குடியாத்தத்தை அடுத்த பரதராமியைச் சோ்ந்த தாமோதரன்(48) முகவராக பணியாற்றி வந்தாா்.
தாமோதரன் மூலம், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த அவரது உறவினா் ரமேஷ் பல லட்சம் ரூபாயை நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தியிருந்தாராம். நிதி நிறுவனம் முடக்கப்பட்டதால், பணத்தை திருப்பித் தரும்படி தாமோதரனை, ரமேஷ் கேட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை தாமோதரனை, ரமேஷ் காரில் கடத்திச் சென்றாராம். இதுகுறித்து தாமோதரனின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். டிஎஸ்பி கே.ராமமூா்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸாா், சித்தூா் அருகே அடைத்து வைக்கப்பட்டிருந்த தாமோதரனை வெள்ளிக்கிழமை மீட்டனா். அவரை அடைத்து வைத்திருந்த ரமேஷ் தப்பியோடி விட்டாா். ரமேஷுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பா்களான ராம்குமாா், சுரேஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து பரதராமி காவல் நிலையம் கொண்டு வந்தனா்.அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.