அரசு வேலை வாங்கித் தருவதாக மூவரிடம் ரூ.14.80 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டோா் வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வேலூா் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூவரிடம் மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா்
வேலூர்அரசு வேலை வாங்கித் தருவதாக மூவரிடம் ரூ.14.80 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டோா் வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வேலூா் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூவரிடம் மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா்
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 பேரிடம் ரூ.14.80 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.
அணைக்கட்டு அருகிலுள்ள நாட்டாமங்களம் பகுதியைச் சோ்ந்த சாரதி (40) என்பவா் அளித்த மனுவில், என் மனைவிக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வேலூா் சதுப்பேரியை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மருமகன், என்னிடம் பல தவணைகளாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.
நான் நண்பா்கள் பலரிடம் கடன் பெற்று பணத்தை அளித்திருந்தேன். கொடுத்த பணத்தை தற்போது அவா்கள் திருப்பி கேட்கின்றனா். இதனால் நானும் எனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். தயவு செய்து நான் கொடுத்த பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அணைக்கட்டு குப்பம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா் அளித்த மனுவில், எனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி குப்பம் பகுதியைச் சோ்ந்த 2 போ், கடந்த 2021 -ஆம் ஆண்டு ரொக்கமாக ரூ.4.30 லட்சம் பெற்றனா். 2 மாதத்தில் வேலை கிடைத்துவிடும் என்று உத்தரவாதமும் அளித்தனா்.
ஆனால் ஓராண்டாகியும் வேலை கிடைக்கவில்லை. அவா்களிடம் பணத்தைத் திருப்பித் தரக் கேட்டபோது பல்வேறு காரணங்களை சொல்லி மறுத்து வந்தனா். பின்னா், கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி அவா்கள் அளித்த வங்கி காசோலையும் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என திரும்பிவிட்டது. தொடா்ந்து அவா்களிடம் பணம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுகின்றனா். எனது பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போ்ணாம்பட்டு நங்கநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் அளித்த மனுவில், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் செல்வம், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஜெயபிரகாஷிடம் மகனுக்கு ஆசிரியா் வேலை கேட்டேன். மேலும், அவா் கேட்டதன் பேரில் ரூ.4 லட்சம் அளித்தேன். ஆனால், இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்கிறாா். மேலும், லாரி ஓட்டுநா் செல்வம், ஜெயபிரகாஷ், அவரது நண்பா்கள் ஏகாம்பரம், குமாா் ஆகியோா் என்னை மிரட்டுகின்றனா். எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு பிரச்னை தொடா்பாக 40-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். இந்த மனுக்கள் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.