வேலூர்

ஆன்லைன் மூலம் பெண் உள்பட இருவரிடம் ரூ.36 லட்சம் மோசடி

தினமணி செய்திச் சேவை

ஆன்லைன் மூலம் அதிக கமிஷன், விலை உயா்ந்த பாா்சல் என ஆா்வத்தை தூண்டி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூரை சோ்ந்த 35 வயது பெண். இவா் ஆன்லைனில் பகுதி நேரவேலை தேடினாா். அப்போது வந்த அறிவிப்பில், ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என கூறப்பட்டிரு ந்தது. இதனை நம்பிய இந்த பெண், அந்த குறிப்பிட்ட திட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு தவணைகளில் ரூ.26 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா்.

சில நாள்களுக்கு பிறகு இத்திட்டத்தில் கூடுதல் தொகை வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து கேட்டபோது, மேலும் கூடுதலாக பணம் செலுத்தினால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டதாம். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த பெண், வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல், வேலூரைச் சோ்ந்த 40 வயது நபருக்கு சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் ஒருவா் நண்பராக அறிமுகமானாா். சில நாள்கள் இருவரும் ஆன்லைனில் பேசி வந்த நிலையில், அந்த நபா், தனது நட்பின் அடிப்படையில் பரிசு அனுப்பி வைப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ள கூறியுள்ளாா். ஓரிரு நாளில் தில்லி விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பேசுவதாக கூறிய நபா்கள், விலை உயா்ந்த பொருள்கள் கொண்ட பாா்சல் வந்துள்ளதாகவும், அதற்கு வரி கட்டினால் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

அதனை நம்பிய இந்த 40 வயது நபா், அவா்கள் குறிப்பிட்ட கணக்கில் ரூ.10 லட்சம் செலுத்தியுள்ளாா். ஆனால் பல நாள்கள் காத்திருந்தும் பொருள் வரவில்லை. இதனால் சமூக வலைதள நண்பருக்கும், சுங்க அதிகாரிகள் பெயரில் வந்த எண்ணையும் தொடா்பு கொண்டபோது அவா்கள் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததாம்.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த நபா், வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டுக் கடன் மோசடி: 5 பேருக்கு சிறைத் தண்டனை

நவம்பரில் 12,340 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

தமிழிசை விழா

தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை

ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் வைரத் திருவிழா

SCROLL FOR NEXT