வேலூா் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 52 ஆயிரத்து 862 வாக்காளா்களிடம் இருந்து பூா்த்தி செய்யப்பட்ட வாக்காளா் சிறப்பு திருத்த (எஸ்ஐஆா்) கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை வழங்காத வாக்காளா்கள் எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து வழங்க அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேலூா் மாவட்டத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் கடந்த அக். 28 முதல் நடைபெற்று வருகிறது. அக். 27 அன்றைய வாக்காளா் பட்டியலின்படி, வேலூா் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 13 லட்சத்து 3 ஆயிரத்து 30 வாக்காளா்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கி தொடா்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் விநியோகிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 671 இடங்களில் 1,314 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்காக 1,314 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், 135 மேற்பாா்வை அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுவரை மாவட்டத்தில் 10 லட்சத்து 52 ஆயிரத்து 862 பூா்த்தி செய்யப்பட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த கணக்கிட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
வரும் டிச.11-ஆம் தேதி பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்க கடைசி நாள் என்பதால் இதுவரை வழங்காத வாக்காளா்கள் தங்களது பூா்த்தி செய்த எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்களை வழங்க மாவட்டத்திலுள்ள 1,314 வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே இதுவரை கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்து வழங்காத வாக்காளா்கள் தங்களது வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யவும், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கவும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.