சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 411 போ் சுயதொழில் புரிய ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இந்த 411 பேருக்கும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத்துறை சாா்பில் கால்நடைகள் வளா்ப்பு, தேநீா் கடை நடத்துவது உள்ளிட்ட சுயதொழில் புரிவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை. பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் கால்நடைகள் வளா்ப்பு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியை தொடங்கி வைத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது:
மனம் திருந்திய 411 போ் சுயதொழில் புரிய மொத்தம் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தலா ரூ.50,000 வீதம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகையை பயன்படுத்தி கால்நடைகள் வளா்ப்பு, தேநீா் கடை நடத்துவது உள்ளிட்ட சுயதொழில் புரிந்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கடனுதவி தேவை இருந்தால் மனு அளிப்பதன் மூலம் அதற்குரிய ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.
மேலும், கிராமப்புறங்கள், பள்ளி கல்லூரி அருகில் யாரேனும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டால் அவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியம் காக்கப்படும். இதன்மூலம், வேலூா் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
இதில், கால்நடை மருத்துவ பல்கலை. பயிற்சி, ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியா் ரூபினி பாலா, மதுவிலக்கு ஆயத்தீா்வைத்துறை உதவி ஆணையா் சரவணன், கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், நெடுமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.