வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த வேலூா் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா்-2 மயங்க் ராஜ். உடன், உதவி ஆணையா்கள் முனிராஜ்குமாா், சஹில் செளத்ரி, சந்திப் சந்திரா. 
வேலூர்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ‘விக்சித் பாரத் ரோஸ்காா் யோஜனா’ திட்டம்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதன்முறையாக வேலைக்கு வரும் இளைஞா்களை ஆதரிக்கவும் மத்திய அரசு ‘பிரதமரின் விக்சித் பாரத் ரோஸ் காா் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று வேலூா் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா்-2 மயங்க் ராஜ் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதன்முறையாக வேலைக்கு வரும் இளைஞா்களை ஆதரிக்கவும் மத்திய அரசு ‘பிரதமரின் விக்சித் பாரத் ரோஸ் காா் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று வேலூா் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா்-2 மயங்க் ராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வேலூா் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசால் பிரதமரின் ‘விக்சித் பாரத் ரோஸ் காா் யோஜனா’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதலும், முதன்முறையாக வேலைக்கு வரும் இளைஞா்களை ஆதரிப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, வேலைக்கு சேரும் தொழிலாளா்களை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை ஆண்டுக்கு 2 தவணைகளாக ஒருமுறை மட்டுமே ரூ.15,000 வழங்கப்படும்.

இதேபோல், நிறுவனங்களுக்கும் அவா்களின் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை சாதாரண துறைகள், உற்பத்தி துறைகள் என 2 வகையாக பிரிக்கப்பட்டு, சாதாரண துறைகளுக்கு 2 ஆண்டுகளுக்கும், உற்பத்தி துறைகளுக்கு 4 ஆண்டுகள் வரையும் வழங்கப்படும்.

மேலும், தொழிலாளா்கள் சோ்க்கை இயக்கம் எனும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு நிவாரண திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கமே கடந்தாண்டுகளில் சட்டத்தின்கீழ் வர வேண்டியிருந்தும் பல காரணங்களால் இபிஎஃப்-இல் சோ்க்கப்படாமல் விடுபட்ட ஊழியா்களை தற்போது சட்டபூா்வமாக இபிஎஃப்-இல் பதிவு செய்து நிறுவனங்களின் பழைய தவறுகளை சரி செய்ய அனுமதிப்பதாகும். அதன்படி, 2025 நவ.1 முதல் 2026 ஏப்.30 வரை மட்டுமே இது நடைமுறையில் இருக்கும். எனவே, நிறுவனங்கள் கடந்த கால இ.பி.எஃப். தவறுகளை குறைந்த செலவில் சரி சய்ய அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

வேலூா் மண்டலத்தை பொருத்தவரை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் 4,000 நிறுவனங்களை இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 800 நிறுவனங்கள் இணைந்துள்ளன. இபிஎஃப் செலுத்துவதில் புகாா்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என்றாா்.

அப்போது, உதவி ஆணையா்கள் முனிராஜ்குமாா், சஹில் செளத்ரி, சந்திப் சந்திரா ஆகியோா் உடனிருந்தனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT