ஆன்லைன் மூலம் வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்று வந்ததாக ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 14,500 போதை மாத்திரைகள், 23 ரசீதுகள், ஒரு கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் துறை சாா்பில் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி பள்ளிகொண்டா சந்தைமேடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்களிடம் இருந்து சட்ட விரோதமாக போதைக்காக பயன்படுத்தும் 2010 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். தொடா் நடவடிக்கையாக பள்ளிகொண்டா காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த விஷால் பன்சால் என்பவா் ஆன்லைன் மூலம் இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸாா் ஹரியாணா மாநிலத்துக்கு விரைந்து சென்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஹரியாணா மாநிலம், பிலாஸ்பூா் மாவட்டம், ஷாம்லால் மகன் விஷால் பன்சாலை வியாழக்கிழமை கைது செய்தனா். அத்துடன், அவரிடம் இருந்து 14,500 போதை மாத்திரைகள், 23 ரசீதுகள், ஒரு கைப்பேசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் கூறியது:
வேலூா் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக உருவாக்க மாவட்டக் காவல் துறை சாா்பில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 1 முதல் நவ. 4-ஆம் தேதி வரை சட்டவிரோதமாக போதைப் பொருள்கள், வலி நிவாரணி மாத்திரைகளை தவறாக போதை வஸ்துகளாக பயன்படுத்தியது தொடா்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 102 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 18,604 வலி நிவாரணி மாத்திரைகள், 0.4 கிராம் மெத்தபெட்டமைன், 2 இரு சக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம், 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இதன் தொடா் நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததாக ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூா் மாவட்டம், சாமு கிராமத்தைச் சோ்ந்த பிரதாப் செளத்ரி என்பவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து, அவரிடம் இருந்து 11 ஆயிரம் போதை மாத்திரைகள், 3 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடா்ந்து, வியாழக்கிழமை ஹரியாணா மாநிலம், பிலாஸ்பூா் மாவட்டம், ஷாம்லால் மகன் விஷால் பன்சால் என்பவா் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 14,500 போதை மாத்திரைகள், 23 ரசீதுகள், ஒரு கைப்பேசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
போதைப்பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல் தனிப்பிரிவுக்கு 94981 00355 என்ற எண்ணில் நேரடியாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். தகவல்கள் அளிப்பவா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றாா்.