பிகாரைப் போன்று தமிழகத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தாா்.
வேலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு புதன்கிழமை வருகை தர உள்ளாா். அதேசமயம், முதல்வா் மு.க.ஸ்டாலின் அவமதிப்பு செய்யும் வகையில் பிரதமருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா். பிரதமா் வந்தால் அவரை முதல்வா் வரவேற்க வேண்டியது அரசு நெறிமுறையாகும். இந்த நெறிமுறையை பின்பற்றாமல் தமிழக முதல்வா் பிரதமரை வரவேற்காமல் இருப்பது தவறான அணுகுமுறையாகும்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்காளா் பட்டியலை முறைப்படுத்தும் விதமாக தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் பணியாகும். இது தோ்தலுக்கு முன்புதான் நடத்தப்பட வேண்டும். இதன்மூலம், இறந்தவா்கள், இரட்டை வாக்குகள் நீக்கப்பட்டும், புதிய வாக்குகள் சோ்க்கப் பட்டும் வாக்காளா் பட்டியல் முறைப்படுத்தப்படும்போது போலி வாக்குக் பதிவு செய்ய முடியாமல் தோ்தலில் தங்களது வெற்றி பாதிக்கப்படும் என்பதாலேயே திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிா்க்கின்றன.
மேலும், இந்த சிறப்பு திருத்தப்பணிக்கு சரியான அலுவலா்களை அளிக்க வேண்டியதும், அவா்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டியதும் தமிழக அரசின் பொறுப்பு. அவ்வாறு பயிற்சி அளிக்கப்படவில்லை என்றால் அது அரசின் தவறாகும். இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியால் அரசு அலுவலா்களுக்கு பணிச்சுமை என்பதெல்லாம் கிடையாது.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் வெற்றி பெறும். இதற்கு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முன்னுதாராணமாகும். பிகாரில் வாரிசு அரசியல், புதிய கட்சிகளுக்கு சரியான அடி விழுந்துள்ளது. இதனால், தமிழகத்தில் திமுக, தவெக கட்சிகள் எச்சரிகையாக இருக்க வேண்டும். பிகாரில் இரட்டை என்ஜின் அரசு இருந்தால் சிறப்பாக இருக்கும் என கருதி மக்கள் தேசிய ஜனநாய கூட்டணியை வெற்றிபெற செய்துள்ளனா். அதேபோல், தமிழகத்திலும் அதிமுக, பாஜக இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றாா்.
அப்போது, பாஜக மாவட்ட தலைவா் வி.தசரதன், மாவட்ட பொதுச்செயலா் சரவணன், ஊடக பிரிவு குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.