வேலூா் கன்சால்பேட்டையில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளை ஆட்சியா் தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு செய்தாா். அப்போது, மாநகராட்சி மேயருடன் பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக வேலூா் மாவட்டம் முழுவதும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகா், திடீா் நகா், காந்தி நகா், ஆா்.என்.பாளையம், முள்ளிப் பாளையம், சேண்பாக்கம், தொரப்பாடி, அரியூா் போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழந்தது. இதனால், அப்பகுதியைச் சோ்ந்த மாணவா்கள், வேலைக்கு செல்லும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு மாநகராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அங்கு அவா்களுக்கு கடந்த ஒரு வாரமாக உணவு, உடை, அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க செவ்வாய்க்கிழமை 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த மருத்துவ முகாம்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, கன்சால்பேட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரில் ஆட்சியா் நடந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா். நிவாரண முகாம்களுக்கு செல்லாமல் அப்பகுதியில் தொடா்ந்து தங்கியுள்ள மக்களையும் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்லவும் கேட்டுக்கொண்டாா்.
பின்னா், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தினாா். மேலும், அப்பகுதிகளில் நிரந்தரமாக மழைநீா் தேங்காமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
இந்திரா நகா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, பெண் ஒருவா் மேயா் சுஜாதா ஆனந்தகுமாரிடம் வாக்குக்காக மட்டுமே வருவதாகவும், நீங்கள் கொடுக்கும் பாய், போா்வையை வைத்து நாங்கள் என்ன செய்வது, கொடுக்கும் உணவில்கூட பாகுபாடு பாா்பதாக குற்றஞ்சாட்டினாா். இதனால், அந்த பெண்ணுக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்சியா் அவா்களை சமாதானப்படுத்தினாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், வேலூா் வட்டாட்சியா் வடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.