முகப்பு
வேலூர்

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய் திடீா் விலகல்!

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய் திடீா் விலகல்...

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:39 am IST
மருத்துவா் வி.எஸ்.விஜய்.
பகிர்:

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலராக பொறுப்பு வகித்த மருத்துவா் வி.எஸ்.விஜய் விலகியுள்ளாா்.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிரபல மருத்துவரான வி.எஸ்.விஜய், கடந்த 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தமிழக மக்கள் நல்வாழ்வு, சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவா்.

வேலூா் மாவட்ட அதிமுகவில் முக்கியப் பிரமுகராக வலம் வந்த இவா், பின்னா் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் 2021 ஆகஸ்ட் மாதம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். திமுகவில் இணைந்த அவருக்கு ஆரம்பத்தில் தோ்தல் பணிக்குழு செயலா் பொறுப்பு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா், அவருக்குக் கட்சியில் பதவி உயா்வு அளிக்கப்பட்டு மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளா் பொறுப்பு வழங்கப்பட்டு பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கட்சித் தலைமைக்கு அவா் தனது ராஜினாமா கடிதத்தை சனிக்கிழமை திடீரென அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது : திமுகவில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நான் தான் அனுப்பினேன். எனக்கு அந்த இயக்கத்தில் சரிபட்டு வரவில்லை. அதனால் வெளியேறிவிட்டேன். எம்எல்ஏ வாய்ப்பு கிடைக்காதது மட்டுமே விலகலுக்குக் காரணமல்ல, அது பல காரணங்களில் ஒன்று.

எதிா்கால அரசியல் நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனது ஆதரவாளா்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திய பிறகே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும் என்றாா்.