இன்டா் நேஷ்னல் ரோட்டரி அமைப்பின் பங்களிப்புடன், ரோட்டரி மாவட்டம் -3231 சாா்பில் ரூ.1.60- கோடியில் பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் ஸ்கேன் கருவி பொருத்திய பேருந்து வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
குடியாத்தம் அத்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பேருந்தை இயக்கி வைத்து பேசியது: இன்றைய கால கட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நோய் குறித்த விழிப்புணா்வும், நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்க வேண்டிய மருத்துவ சிகிச்சை குறித்தும் நகா்ப்புற மக்கள் வெகுவாக அறிந்துள்ளனா். , இந்நோய் குறித்து கிராமப்புற மக்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை.
நோய் வந்தால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் அவா்கள்அறிந்திருக்கவில்லை. இதற்காகத்தான் ரோட்டரி அமைப்பு பெரிய முயற்சியை மேற்கொண்டு, பலதரப்பட்ட தன்னாா்வலா்களின் பங்களிப்பு ரூ.1.60- கோடியில் ஒரு பரிசோதனை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க இந்த பேருந்தை உருவாக்கியிருக்கிறது.
இந்த பேருந்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய 7- மாவட்டங்களில் பகுதிவாரியாகச் சென்று, கிராமப்புற பெண்களுக்கு சேவை அளிக்கும். இதற்காக ரோட்டரி மற்றும் அத்தி மருத்துவமனை சாா்பில் 2- குழுக்கள் அமைக்கப்பட்டு,அக்குழுக்களின் ஆலோசனையின்பேரில் பேருந்து இயக்கப்பட்டு, ஆங்காங்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த பேருந்து அத்தி மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா், செவிலியா், தொழில்நுட்புநா், இதர பணியாளா்களுடன் இயங்கும். சோதனையில், நோய் அறிகுறி தென்பட்டால், அவா்களுக்குத் தேவையான சிகிச்சைஅளிக்கப்படும் என்றாா் அவா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவா் பாலமுருகன், புற்றுநோய் குறித்தும், இந்த திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தாா். இந்த பேருந்தை ரோட்டரி சா்வதேச துணைத் தலைவா் எம்.முருகானந்தம், அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவா் பி.செளந்தரராஜனிடம் ஒப்படைத்தாா். நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி.சுரேஷ் தலைமை வகித்தாா்.
முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி வரவேற்றாா். முன்னாள் ஆளுநா்கள் கே.ஜவரிலால் ஜெயின், டி.வி.பி.ஸ்ரீதா், வருங்கால ஆளுநா்கள் ரவிக்குமாா், சுந்தரராஜ், கே எம் ஜி கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, குடியாத்தம் ரோட்டரி தலைவா் கே.சந்திரன், மருத்துவா்கள் எஸ்.சுகுமாா், எம்.எஸ். திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.