காட்பாடி வழியாக இயக்கப்பட்ட ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.சித்ரா உத்தரவின் பேரில், ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஐந்தாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற திருப்பதி - சிக்மங்களூா் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டபோது ரயிலின் முன்பக்க பொதுப் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் அமா்ந்திருந்த ஒரு நபரை போலீஸாா் கண்காணித்தனா். அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் 7 பொட்டலங்களில் மொத்தம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடா்ந்து, கஞ்சாவைக் கடத்தி வந்த நபரை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூா் தாலுகாவைச் சோ்ந்த ஆசிம் (26) என்பது தெரியவந்தது. உடனடியாக ஆசிமை போலீஸாா் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.