நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி அனைத்துத்தரப்பு மக்களும் கொண்டாடும் ஒரே விழா பொங்கல் திருவிழா என்று வேலூா் நறுவீ மருத்துவமனையின் தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்.
பொங்கல் திருநாளையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் தலைவா் ஜி.வி. சம்பத் தலைமையில் துணைத் தலைவா் அனிதா சம்பத், பொது மேலாளா் நிதின் சம்பத், அபிராமி நிதின் ஆகியோா் பொங்கல் பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து, தமிழா்களின் பாராம்பரிய கலை விளையாட்டுகளான கும்மியடித்தல், உறியடித்தில், சிலம்பம், கயிறு இழுக்கும், கோணிப்பை ஓட்டம், கரும்பு கடித்தல் என நடத்தப்பட்ட போட்டிகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் பரிசுகள் வழங்கி பேசுகையில், சமத்துவ பொங்கல் என்பது தமிழா்களுக்கான பாரம்பரிய திருவிழாவாகும்.
நாடு முழுவதும் இவ்விழாவை மக்கள் சாதி, மத, பேதமின்றி அனைத்து தரப்பினரும் எவ்வித பாகுபாடின்றி கொண்டாடி வருகின்றனா். இதையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள், எருது விடும் திருவிழா, மாடுபிடி திருவிழா என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ஆண், பெண் என்ற பாகுபாடின்றி பெருமளவில் பங்கேற்று தமிழா்களின் வீர விளையாட்டுகளை உலகம் முழுவதும் பரைசாற்றி வருகின்றனா்.
வேலூா் நறுவீ மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில், உள்நாடு, வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக வந்துள்ள நோயாளிகளும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனா் என்றாா்.
விழாவில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், முதன்மைநிதி அலுவலா் வெங்கட்ரங்கம், தலைமை இயக்குதல் அலுவலா் சரவணன் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.