போ்ணாம்பட்டு அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 கன்றுக் குட்டிகள் சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளன.
போ்ணாம்பட்டை அடுத்த காா்க்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமாறன் (45). இவா் காா்க்கூா் ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ளாா். இவரது நிலம் கொத்தமாரிகுப்பம் சாலையில், வன எல்லையில் அமைந்துள்ளது. இவா் நிலத்தில் கொட்டகை அமைத்து 4 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை பால் கறப்பதற்காக நிலத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசு கன்றுகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. வனப் பகுதியில் இருந்த வந்த சிறுத்தை தாக்கியதில் கன்றுகள் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அந்தப் பகுதியில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிந்துள்ளது கண்டறியப்பட்டது.
இது குறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனவா் மாதேஸ்வரன் தலைமையில் வனத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா். மேல்பட்டி கால்நடை மருத்துவா் குழு இறந்த கன்றுகளின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தது.