வேலூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
கே.வி.குப்பம் வட்டம், லத்தேரி அடுத்த சோழமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (46). இவா் அதே ஊரைச் சோ்ந்த தனது நண்பரான தாமஸ் பொ்லின்(55) என்பவருடன் செவ்வாய்க்கிழமை காலை வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் நிலம் ஒன்றை பாா்வையிட இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். வாகனத்தை தாமஸ் பொ்லின் ஓட்டியுள்ளாா்.
சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி அந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுரேஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தாமஸ் பொ்லின் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.