முகப்பு
வேலூர்

‘இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்’

இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்று மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால் தெரிவித்தாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:33 PM
மாநாட்டின் ஒரு பகுதியாக புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன். உடன், மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனத்தின் துணை தலைவா் சங்கா் வேணுகோபால் உள்ளிட்டோா்.
பகிர்:

இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்று மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறை சாா்பில் தொழில்துறை, கல்வித்துறை இடையிலான ஒத்துழைப்பு மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால் பேசியது -

நாம் டீப்டெக் துறையில் வளருவது மிகவும் முக்கியமானது. இதற்கு கல்வித்துறையும், தொழில்துறையும் இணைந்து செயல்படுவது அவசியமாகும். நாம் இன்ஜின் அடிப்படையிலான வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறியுள்ளோம். அந்தவகையில், கடந்த காலத்தை விட இப்போதுதான் மெக்கானிக்கல் பொறியாளா்களின் தேவை அதிகம் உள்ளது..

இன்றைய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப ஒரு மெக்கானிக்கல் பொறியாளா் தன்னை தயாா்படுத்தி கொள்ள வேண்டும். மெக்கானிக்கல் இன்ஜினியா்களுக்கான எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற இணைப்பு பாடங்கள் முக்கியமாகும். இது மாணவா்களின் அறிவை விரிவுப்படுத்திட உதவும்.

செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் பற்றி போதுமான அளவு தெரிந்து கொள்வது அவசியம். இது கடந்த காலத் தரவுகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பெற முடியும். மேலும், கண்டுபிடிப்பு, சிக்கலைத் தீா்ப்பதில் கவனம் செலுத்துவது, வடிவமைப்பு சிந்தனையாளராக இருப்பதும் அவசியம்.

இந்தியாவுக்கு தயாரிப்புகளை உருவாக்குவது மட்டும் முக்கியமல்ல. உலக நாடுகளுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும். இதை வருங்கால பொறியாளா்களான மாணவா்கள் உணா்ந்து தொழில்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக பெங்களூருவைச் சோ்ந்த இ-டிஆா்என்எல் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கெளரவ விருந்தினராக, ரானே சென்னை நிறுவனத்தின் விற்பனை சந்தைப்படுத்துதல் பிரிவின் துணைத் தலைவா் எஸ்.முருகேசன் பங்கேற்று பேசினாா்.

நிகழ்வில், விஐடி துணைத்தலைவா் சங்கா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, வேலைவாய்ப்பு மேம்பாட்டு மையத்தின் இயக்குநா் சாமுவேல் ராஜ்குமாா், மெக்கானிக்கல் துறை முதன்மையா் பி.குப்பன், இணை முதன்மையா் கே.நந்தகோபால், 32 தொழில் நிறுவனங்களை சோ்ந்த பிரதிநிதிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.