முகப்பு
கோயம்புத்தூர்

கொள்ளை போகிறது விலை மதிப்பற்ற இயற்கை வளம்!

உடுமலை,நவ.5:   சந்தன மரக் கடத்தலில் தொடர்புடையதாகக் கூறப்படும் வனத்துறை அதிகாரிகளையும், மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினைரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற க

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:13 PM
பகிர்:

உடுமலை,நவ.5:   சந்தன மரக் கடத்தலில் தொடர்புடையதாகக் கூறப்படும் வனத்துறை அதிகாரிகளையும், மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினைரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

  இந்த சம்பவங்கள் குறித்து உயர்நிலைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட குழிப்பட்டி, குருமலை மற்றும் மாவடப்பு செட்டில் மெண்ட்டுகளில் கடந்த சில மாதங்களாக பெருமளவில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

  இந்த சம்பவங்களுக்கு மலைவாழ் மக்களே காரணம் என வனத் துறையினரும், வனத் துறையினரே காரணம் என மலைவாழ் மக்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர்.

அதிரடி ஆய்வு..    இதனால், இரு தரப்பினர் மீதும் அதிருப்தி அடைந்த உயர் அதிகாரிகள், உடுமலை வனப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

  தலைமை வனப் பாதுகாவலர் தியாகி, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பசவராஜ், அதிரடிப்படை ஐஜி சைலேந்திர பாபு ஆகியோர் இந்த ஆய்வுகளுக்கு தலைமை வகித்தனர். இவர்களுடன் சிறப்பு அதிரடிப் படையினரும் சென்றனர்.

  இந்தப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 12.8 டன் சந்தன மரங்கள் மீட்கப்பட்டன.

  மேலும் இந்த மூன்று செட்டில்மெண்டுகளிலும் வெட்டப்பட்ட பல டன் சந்தன மரங்கள் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

அதிகாரிகள் இடமாற்றம்..    இதற்கிடையே, சந்தன மரக் கடத்தலுக்கு துணை போனதாகக் கூறப்படும் கீழ் மட்ட வன அதிகாரிகளை ஒதுக்கி விட்டு அதிரடிப் படையினரே நேரடியாக களம் புகுந்ததும், குறிப்பாக உடுமலை வனச் சரகத்தில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகளை அவசர கதியில் இடமாற்றம் செய்ததும் ஏன்? என்பதும் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

  இது குறித்து வன ஆர்வலர்கள் கூறியது:

  தற்போது மீட்கப்பட்டுள்ள 12.8 டன் சந்தன மரங்கள் வெறும் கழிவுகள்தான்.

  இவைகளில் இருந்த "சேகு' என கூறப்படும் விலைமதிப்புள்ள முக்கியப் பகுதி எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது.

  இத்தனை மரங்கள் வெட்டப்படும் வரை உடுமலை வனப்பகுதி அதிகாரிகள் எங்கே போயிருந்தார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதிலே இல்லை. இது தொடர்பாக எந்த ஒரு குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. உடுமலை வனத்துறை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை திசைதிருப்பும் செயலாகவே கருதுகின்றனர் பொதுமக்கள்.

  இந்நிலையில், வீரப்பனின் சந்தனக் காடுகளுக்கு இணையாக உடுமலை அருகே இருந்து வரும் சந்தன காடுகளையும், விலைமதிப்பற்ற இந்த இயற்கை வளத்தையும் முழுமையாக பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழிகளுக்கு சீல்..    24 மணி நேர கண்காணிப்பிற்கு ஏதுவாக துப்பாக்கி ஏந்திய அதிரடிப் படையினரிடம் இந்த வனப் பகுதியை ஒப்படைக்க வேண்டும்.

 ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற உள்ள 7 வழிகளையும் சீல் வைக்க வேண்டும்.

  20 வயதிற்கு மேற்பட்ட சுமார் 600 சந்தன மரங்களை வெட்ட துணை போனதாக கூறப்படும் மலைவாழ்மக்கள் மீதும், வன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இது குறித்து உயர்நிலைக்குழு ஒன்றை அமைத்து அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →