ஈரோடு, பிப்.12: குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் படி மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியமும் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், இங்குள்ள குழந்தைகள் மீண்டும் தொழிலாளர்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு கடந்த 1995-ல் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தை ஏற்படுத்தியது. நிறுவனங்களில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு இத் திட்டம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பள்ளிகளில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சேலம், கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 534 பள்ளிகளில் சுமார் 25 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 உணவுப்படி வழங்கப்படுகிறது. இந்த உணவுப்படி கடந்த 1995-ம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது.
இந்த தொகையை பயன்படுத்தியே முட்டை, பயறு வகைகள், சாம்பார் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் ஆகிய உணவு வகைகளை வாரத்தில் இரண்டு நாட்கள், பிஸ்கட், பால் மற்றும் பேரீச்சம் பழம் உள்ளிட்ட உணவு வகைகளை வாரத்தில் ஒருநாள் என ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வழங்கவேண்டும் என்று கூறுகிறது மத்திய அரசு உணவுப் பட்டியல்.
உணவுப் பட்டியலில் உள்ள உணவுப் பொருட்களை மட்டுமே வழங்கவேண்டும் என்று பள்ளிகளைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கண்டிப்பு காட்டுகின்றனர் அதிகாரிகள்.
இதனால் பொரும்பாலான தொண்டு நிறுவனங்கள் இந்தப் பள்ளிகளை பராமரிக்க முடியாது என்று ஒதுங்கிவிட்டன.
இதனால் தமிழகத்தில் உள்ள 534 பள்ளிகளில் 400 பள்ளிகள், ஆசிரியர்களின் பராமரிப்பிலேயே உள்ளன.
பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆனாலும், ரூ.1500 ஊதியத்திலேயே வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் இவர்கள், குறைவான நிதி ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இத்திட்டப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந் நிலையில், குழந்தைகளுக்கு உணவு அளிக்க கடைகளில் வாங்கிய கடன் அதிகமாகி விட்டதால், வட்டிக்குக் கடன் வாங்கி இந்தக் கடனை திருப்பி செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மாநிலச் செயலர் எஸ். அழகுஜோதி கூறியது: ஊதிய உயர்வு, உணவுப் படி உயர்வு, பள்ளிகளுக்கு சொந்தக் கட்டடம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, சங்க நிர்வாகிகள் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்தித்து அண்மையில் மனு கொடுத்துள்ளனர்.
பல மாவட்டங்களில் ஆட்சியர்களின் தனிக் கவனத்தினால், இத் திட்டக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில மாவட்டங்களில் ஆசிரிய மற்றும் தொண்டு நிறுவனங்களின் முயற்சியின் மூலமே குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரையில் கடைகளில் கடன் வாங்கி உணவு அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.