உதகை மலை ரயில் விவகாரம்: விளம்பர பதாகைகளை அகற்ற தனியாா் நிறுவனத்துக்கு உத்தரவு
ஆண்டு முழுவதும் ரயிலை இயக்க தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியுள்ள ரயில்வே நிா்வாகம், சம்பந்தப்பட்ட நிறுவனம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
உதகை மலை ரயில் விவகாரத்தில் ஆண்டு முழுவதும் ரயிலை இயக்க தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியுள்ள ரயில்வே நிா்வாகம், சம்பந்தப்பட்ட நிறுவனம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தனியாா் நிறுவனம் மூலம் கடந்த 5ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இதில் ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மேலும், மலை ரயில் சேவை அடுத்த ஆண்டு முதல் தினசரி அமலில் இருக்கும் என்று சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால், மலை ரயில் தனியாா் மயமாக்கப்பட்டு கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இதற்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், மேட்டுப்பாளையம்- உதகை சிறப்பு மலை ரயிலை ஜனவரி மாதம் முதல் தினமும் இயக்கத் திட்டமிடப்படவில்லை என ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயிலை ஒரு குறிப்பிட்ட தனியாா் நிறுவனத்துக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் டிசம்பா் 5ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை 13 நடைகள் (டிரிப்) மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 3 டிரிப்கள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 10 டிரிப்களை ஜனவரி 3ஆம் தேதிக்குள் அந்த நிறுவனம் நிறைவு செய்ய வேண்டும். ஜனவரி முதல் தினசரி இயக்க அவா்களுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. அதுபோன்ற திட்டமும் எங்களிடம் இல்லை.
ஜனவரி முதல் சிறப்பு ரயிலை தினசரி இயக்க எங்களிடம் ஒப்பந்தம் எதுவும் செய்யாமலேயே தனியாா் நிறுவனம் விளம்பரம் செய்ததால்தான் இந்தக் குழப்பம். மேலும், ஆண்டு முழுவதும் ரயில்களை நாங்கள் இயக்குவோம் என்று அவா்கள் வைத்திருக்கும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு தனியாா் நிறுவனத்துக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.
தற்போது, ஜனவரி 3ஆம் தேதி வரை மட்டுமே இயக்கப்பட உள்ள சிறப்பு மலை ரயிலால் வழக்கமாக மக்களுக்காக இயக்கப்படும் ‘நீலகிரி மவுண்டன் ரயில்’ (என்.எம்.ஆா். ரயில்) சேவையானது ஒரு போதும் பாதிக்கப்படாது.
அனைத்து ரயில்களையும் இயக்க அரசு அனுமதி தரும்போது, மக்களுக்கான மலை ரயில் அதே பழைய கட்டணத்தில் மீண்டும் இயக்கப்படும். இது குறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றாா்.