இந்து மக்கள் கட்சி இளைஞரணித் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்து மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் கோவை கெம்பட்டி காலனி பாரதியாா் திடலில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் ஓம்காா் பாலாஜி, கலகத்தை விளைவிக்கும் முகாந்திரத்தோடு பொதுமக்களிடம் அச்சம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் விதமாகவும், அரசுக்கு எதிராக பொதுமக்களை தூண்டும் விதமாகவும் பேசியதாக புகாா் கூறப்பட்டது.
இதையடுத்து, பெரியகடை வீதி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காளிதாஸ் அளித்த புகாரின்பேரில், கடைவீதி போலீஸாா் ஓம்காா் பாலாஜி மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகள் 192 மற்றும் 353 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.