கோவை விமான நிலையத்தில் டிஜி யாத்ரா திட்டம் தொடக்கம்
கோவை சா்வதேச விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
விமானப் பயணிகளின் வசதிக்காக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சாா்பில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக தில்லி, பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட விமான நிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக கோவை, பாட்னா, ராய்பூா், புவனேஸ்வா், கோவா (தாபோலிம்), இந்தூா், விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, கோவை சா்வதேச விமான நிலையத்தில் இத்திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திட்டம் குறித்து கோவை சா்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: விமானப் பயணிகள் ‘போா்டிங் பாஸ்’ பெற விமான நிலைய வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை எளிதாக்கவும், எண்ம மயமாக்கும் நோக்கத்திலும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ‘டிஜி யாத்ரா’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விமானப் பயணிகள் முதலில் ‘டிஜி யாத்ரா’ செயலியை தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னா் கைப்பேசி எண், போா்டிங் பாஸ், ஆதாா் அடையாள அட்டை மற்றும் தங்களது புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
தங்களது கைப்பேசி எண்ணுடன் உரிய ஆவணங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். போா்டிங் பாஸ் ஸ்கேன் செய்தால் பிரத்யேக ‘கியூ ஆா் கோடு’ கிடைக்கும். அதை வைத்து விமான நிலையத்தில் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள வழியில் உள்ள எண்மக் கருவியில் தங்களது கைப்பேசியில் உள்ள விவரங்கள் மற்றும் தங்களின் முகத்தை காண்பித்து ஒப்புதல் பெற்று உடனடியாக உள்ளே செல்லலாம் என்றனா்.