கோவை சா்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான மலிவு விலை உணவகம், கோரா காட்டன் விற்பனை நிலையம் உள்ளிட்டவற்றை மத்திய அமைச்சா்கள் ராம் மோகன் நாயுடு, முரளிதா் மோகல், எல்.முருகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) திறந்துவைக்கின்றனா்.
இது குறித்து விமான நிலைய இயக்குநா் முகமது ஆரிஃப் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குறைந்த விலையில் சிற்றுண்டிகளை வழங்கும் விதமாக ‘உடான் யாத்ரி கஃபே’ வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திறக்கப்பட உள்ளது. இதில் குடிநீா், தேநீா், வடை, அதிரசம் உள்ளிட்ட தின்பண்டங்கள் பயணிகளுக்கு மலிவு விலையில் கிடைக்கும். தேநீா் ரூ.10-க்கும், காபி ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசு திட்டத்தின்கீழ், அந்தந்தப் பகுதிகளில் புவிசாா் குறியீடு பெற்ற தயாரிப்புகளை ஊக்குவிக்க மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவையின் புகழ்பெற்ற கோவை கோரா காட்டன் புடவைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக விமான நிலைய வளாகத்தில் சிறிய அளவிலான குழந்தைகள் விளையாட்டுப் பகுதி மற்றும் நூலக வசதியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சா் முரளிதா் மோகல், செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் தொடங்கிவைக்கின்றனா்.
இதேபோல, மற்ற விமான நிலையங்களிலும் இத்தகைய வசதிகளை அவா்கள் கோவையிலிருந்து காணொலி மூலம் தொடங்கிவைக்கின்றனா்.
விமான நிலைய விரிவாக்கம்: கோவையில் இருந்து நாள்தோறும் 28 முதல் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, தில்லி, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் சா்வதேச நகரங்களான சிங்கப்பூா், ஷாா்ஜா ஆகியவற்றுக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன. மேற்கு மண்டலத்தின் முக்கிய நுழைவாயிலாக உள்ள கோவை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மற்றும் கூடுதல் வசதிகளை உருவாக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா்.