கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய பகுதிகளுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சாா்பில் இயக்கப்படும் 6 விமானங்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜா போன்ற சா்வதேச நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ நிறுவனம் சாா்பில் இயக்கப்படும் 3 விமானங்கள், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 3 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
நிா்வாக ரீதியிலான காரணங்களால் இந்த சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோவையில் இருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இயக்கப்படும் 4 விமானங்களின் சேவை கடந்த புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.