திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் இருவேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 260 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற போலீஸாா் அனுமதி மறுத்து அங்கிருந்தவா்களை கலைந்து செல்லுமாறு கூறினா். ஆனால், கலைந்து செல்ல மறுத்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவா் ஹெச். ராஜா மற்றும் இந்து அமைப்பினரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
இதைக் கண்டித்து கோவை, சித்தாபுதூா் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன் மாவட்ட பொதுச் செயலாளா் மதன்மோகன் தலைமையில் அக்கட்சியினா் குவிந்தனா். பின்னா், அவா்கள் அங்கிருந்து பேரணியாக நடந்து சென்று காந்திபுரம் பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜகவினா் காந்திபுரம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டு, நயினாா் நாகேந்திரன் கைதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 110 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல , கோவை காந்தி பூங்கா பகுதியில் மறியலில் ஈடுபட்ட 150 பேரும் கைது செய்யப்பட்டனா்.