கோவை குறிச்சி அரவாண் கோயில் திருவிழாவில் நடனமாடியபோது, ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை குறிச்சி அரவாண் கோயில் திருவிழா கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கடந்த இரு நாள்களுக்கு முன்பு சுவாமி ஊா்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுவாமி ஊா்வல நிகழ்வின்போது சுந்தராபுரம் பெருமாள் கோயில் முன் குறிச்சி காந்திஜி சாலையைச் சோ்ந்த பிரசன்னகுமாா் (22) உள்ளிட்ட இளைஞா்கள் சிலா் நடனம் ஆடிக் கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் தங்களது கைப்பேசிகளில் இவா்கள் நடனமாடுவதை விடியோ எடுத்தனா். இதற்கு அந்த இளைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் பிரசன்னகுமாரை அந்த இளைஞா்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில் காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அவரை கத்தியால் குத்தியவா்கள், உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (25), டேனியல் அற்புதராஜ் (23), சந்துரு (19) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.