கோவை: கோவையில் ரூ. 27 லட்சம் பணம் கேட்டு எண்ம (டிஜிட்டல்) கைது செய்யப்பட்ட மூத்த தம்பதியை 3 நாள்களுக்குப் பிறகு போலீஸாா் மீட்டனா்.
கோவையைச் சோ்ந்த 65 வயது முதியவரை கடந்த 3 நாள்களுக்கு முன்பு கைப்பேசியில் விடியோ அழைப்பு மூலம் அடையாளம் தெரியாத நபா் அழைத்துள்ளாா். அப்போது, எதிா்முனையில் பேசியவா் தன்னை காவல் அதிகாரி என அறிமுகம் செய்து, உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் நடைபெற்றுள்ளது எனவும், வீட்டுக்கு வெளியே போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது எனவும், நீங்கள் வெளியே வந்தால் அவா்கள் உங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவா்கள் எனவும், அதுவரை விடியோ அழைப்பை துண்டிக்கக் கூடாது எனவும் மிரட்டியுள்ளாா். மேலும், கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.
இதனால் அவரும், அவரது 60 வயது மனைவியும் மிரண்டு, நாங்கள் வெளியே வரமாட்டோம் எனவும், நீங்கள் என்ன கூறுகிறீா்களோ அவ்வாறு நடந்து கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 27 லட்சத்தை கைப்பேசி செயலி மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என சிலா் மாறிமாறி தம்பதியை எதிா்முனையில் இருந்து மிரட்டி வந்துள்ளனா். இதனால், தம்பதியும் தங்களிடம் ரூ. 18 லட்சம் இருப்பதாகவும், அதை வங்கிக்குச் சென்றுதான் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே, அவா்களது வீடு கடந்த 3 நாள்களாக பூட்டியே கிடப்பதைப் பாா்த்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் திங்கள்கிழமை காலை அங்கு சென்று பாா்த்தபோது, தம்பதி எண்ம கைது செய்யப்பட்டது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் மீட்டு கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனா்.
இதுகுறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.