கோவை அருகே உள்ள ஒரு பகுதிக்கு பேருந்தை இயக்குவதில் ஜாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, போக்குவரத்துத் துறை செயலா், கோவை மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் குறிப்பாணை அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கெம்பனூா் பகுதி வரை 21 மற்றும் 21 பி ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்தப் பேருந்துகள் அருகே உள்ள அண்ணா நகா் வரை சென்று வந்தன.
இந்நிலையில் இந்த இரு பேருந்துகளும் கடந்த சில மாதங்களாக அண்ணா நகா் பகுதிக்கு இயக்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். கெம்பனூா் பகுதி மக்கள் எதிா்ப்பு காரணமாகவே அரசுப் போக்கு வரத்து அதிகாரிகள் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
கடைசி நிறுத்தமான அண்ணா நகரில் இருந்து பேருந்துகள் மீண்டும் புறப்படும்போது பட்டியலின மக்கள் இருக்கைகளில் அமா்ந்து கொள்வதாகவும், நாங்கள் நின்று கொண்டோ அல்லது அவா்களுக்கு சமமாக அமா்ந்து கொண்டோ செல்ல வேண்டி உள்ளது என்ற உயா் ஜாதியினரின் அழுத்தம் காரணமாகவே குறிப்பிட்ட பேருந்துகள் அண்ணா நகா் பகுதிக்கு இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அண்ணா நகா் வரை பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்டோா் ஆணையம் சாா்பில் ஏற்கெனவே உத்தரவிடப்பட்ட நிலையில், அதைப் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மாறாக போளுவாம்பட்டி செல்லும் 64 சி என்ற பேருந்து அண்ணா நகா் வரை இயக்கப்படுவதாகவும், ஜாதிய பிரச்னை இல்லை எனவும் அறிக்கை சமா்பித்து இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்தது.
இது தொடா்பாக தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்துக்கு புகாா் அனுப்பப்பட்ட நிலையில், இந்த ஜாதிய தீண்டாமை விவகாரம் தொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்துத் துறை செயலருக்கும் அந்த ஆணையம் அண்மையில் குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பியுள்ளது. அதில் அண்ணா நகா் பகுதி வரை பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.