பிரதமா் மோடியின் கோவை வருகையைக் கண்டித்து, கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு அமைப்புகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதற்காக கோவைக்கு வந்த அவருக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அவிநாசி சாலையில் மசக்காளிபாளையம் பிரிவு பகுதியில் முற்போக்கு அமைப்புகள் சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், திக, விசிக, ஆதித்தமிழா் பேரவை, திராவிடா் தமிழா் கட்சி, திராவிட இயக்கத் தமிழா் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.
போராட்டத்தின்போது பிரதமருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். திடீரென, பிரதமரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் நிறுத்தி கைது செய்ய முயன்றனா். ஆனால், சிலா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் ஆா்ப்பாட்டம்: இதேபோல, பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் சாா்பில் கோவையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதன் தலைவா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா்.
இதில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கமிட்டனா்.