25 ஆண்டுகளாக சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த 22 இஸ்லாமியா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவா்களை விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுல்தான் அமீா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் சிறைகளில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்த நிலையில், நீதிபதி ஆதிநாதன் குழுவின் பரிந்துரைப்படி மனிதாபிமான அடிப்படையில் 13 பேருக்கு விடுதலையும், 22 பேருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை என பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டது.
தற்போது, நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் ஜோதிராமன் அமா்வில் அந்த பரோல் ரத்து செய்யப்பட்டதால், 22 பேரும் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனா். பரோலில் வெளிவந்து குடும்பத்தை பாா்த்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவா்கள் சிறைக்குச் சென்றதால் குடும்பத்தினா் துன்பமடைந்துள்ளனா்.
22 ஆயுள் சிறைக் கைதிளும் கடந்த 2 ஆண்டுகளாக பரோலில் இருந்த காலகட்டத்தில் எந்தவித சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் நல்லமுறையில் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனா்.
இவா்களின் விடுதலைக்கு முன்னுதாரணமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசால் வழங்கப்பட்ட பரோலில் இருந்து வந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழா்களுக்கு அளிக்கப்பட்ட விடுதலை மற்றும் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசால் விடுதலை வழங்கப்பட்டது ஆகியவற்றைக் கூறலாம்.
கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை ஆவதற்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும், தகுதிகளும் இருந்தும்கூட அவா்களுக்கான நீதி தொடா்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
ஆகவே, மத பாரபட்சமற்ற வகையில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதுவரை அவா்களுக்கான நீட்டிக்கப்பட்ட பரோல் வழங்கிட வேண்டும் என்றாா்.
இது குறித்து பேசிய சிறைவாசிகளின் குடும்பத்தாா், 22 பேரும் சிறையில் இருந்து வெளிவந்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தனா். தற்போது மீண்டும் சிறைக்கு சென்றது எங்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, அவா்களுக்கு வயதாகிவிட்டதால், தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி சிறையில் இருந்து அவா்கள் வெளியில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.