புது டில்லி, பிப். 4 - இப்போதைய லோக்சபையின் ஆயுளை ஓராண்டுக் காலம் நீடிக்கும் மசோதா இன்று லோக்சபையில் நிறைவேறியது. லோக்சபையின் பதவிக்காலம் மார்ச் 18 (ஆம் தேதி)யுடன் முடிவடைகிறது.
லோக்சபையின் ஆயுளை ஓராண்டு, நீடிப்பதற்கு வகை செய்யும் மக்கள் சபை (ஆயுட் கால விஸ்தரிப்பு) மசோதாவை இன்று லோக்சபையில் பிரேரித்து சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலே பேசினார். "அவசர நிலை பிரகடனத்தைத் தொடர்ந்து தேசத்துக்குக் கிடைத்த அனுகூலங்களை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் லோக்சபை ஆயுளை ஓராண்டு நீடிப்பது அவசியமாகிவிட்டது" என்று அவர் கூறினார்.
பொருளாதார நிலைமை, சட்ட ஒழுங்கு நிலைமை ஆகியவற்றிலும், தேசிய வாழ்வின் சகல துறைகளிலும் கட்டுப்பாடு அபிவிருத்தியடைந்துள்ள போதிலும் நம்முடைய முயற்சிகளை நாம் தளர்த்துவதற்கில்லை என்று கோகலே கூறினார். சகல துறையிலும் ஸ்திரத்தன்மையையும், தொடர்ந்து முன்னேற்றத்தையும் உறுதி செய்ய இப்போதைய சபையின், மக்கள் சபையின் ஆயுளை ஓராண்டு நீடிப்பது அவசியமாகும் என்று கோகலே கூறினார்.
இப்போதைய லோக்சபையின் பதவிக்காலம் மார்ச் 18-ந் தேதியுடன் முடிவடையதாயிருந்தது.
நான்கு மணி நேர விவாதத்தைத் துவக்கிவைத்து சோமநாத் சட்டர்ஜி (இடது கம்யூ) அரசியல் சாஸனத்தில் உள்ள "அசாதாரண ஷரத்தை" பொது ஷரத்து போல பயன்படுத்துவதைக் கண்டித்தார்.
டி. ஸி. கோஸ்வாமி (புதுகாங்) இம் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது "விநோதமான காட்சி" என்று வர்ணித்தார். ...
... இ. ஆர். கிருஷ்ணன் (தி.மு.க) மசோதாவை வாபஸ் பெற்று தேர்தல் நடத்த வேண்டுமென்று கூறினார். தமிழ்நாடு அரசு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டு தான் கலங்கவில்லை என்று கூறினார். ...
... மாயதேவர் (அ.தி.மு.க.) நாட்டின் பந்தோபஸ்தைக் காக்க மசோதா அவசியம் என்று கூறினார். ஏழை மக்களுக்கு வாக்குரிமையைவிட உணவு முக்கிய என்று கூறினார்.
சென்னை, பிப்: 4 - கீழ் வெண்மணி தீவைப்பு, கலவரம் வழக்கில் சம்பந்தப்பட்ட கோபால கிருஷ்ணநாயுடு, மற்றும் 8 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று ஹைகோர்ட்டில் நீதிபதிகள் பி.எஸ். கைலாசமும், சி.ஜே.ஆர். பாலும் நிராகரித்தனர்.
1968 டிசம்பர் 25ந்தேதி கீழ் வெண்மணி கிராமத்தில் தீ வைத்து 42 பேரைக் கொன்றதாக மனுதாரர்கள் உட்பட 23 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கிழக்குத் தஞ்சாவூர் செஷன்ஸ் நீதிபதி மொத்தம் 15 பேரை விடுதலை செய்தும், பாக்கி 8 பேருக்கு பல்வேறு காலத்துக்கும் சிறைத் தண்டனை விதித்தார். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அப்பீல் செய்து கொண்டனர். சிலரை விடுதலை செய்ததை எதிர்த்து அரசாங்கமும், அப்பீல் செய்தது. அப்பீலை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதிகள் கே. எஸ். வெங்கட்ராமனும், எஸ் மகராஜனும், மனுதாரர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். அரசாங்கத்தின் அப்பீலையும் தள்ளுபடி செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு க்கு அப்பீல் செய்ய அரசாங்கம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதையும் ஹைகோர்ட் நிராகரித்தது. அதன்பேரில் அப்பீல் செய்ய விசேஷ அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டிடம் அரசாங்கம் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை அனுமதித்த சுப்ரீம் கோர்ட், 12 பேரைக் கைது செய்யும்படி கிழக்குத் தஞ்சாவூர் செஷன்ஸ் நீதிபதிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதில் இப்போது ஜாமீன் மனு தாக்கல் செய்த 9 பேரும் இருக்கிறார்கள். இந்த 9 பேரும் செஷன்ஸ் கோர்ட்டில் தாங்களாகவே சரணடைந்தனர்.
ஹைகோர்ட்டில் தங்களை ஜாமீனில் விடுதலைக் செய்யக் கோரி மனுதாரர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜாமீனில் விடுதலை செய்ய ஹைகோர்ட்டுக்கு அதிகாரங்கள் இருப்பதாக அவர்கள் சார்பில் கூறப்பட்டது. சம்பவம் நடந்த பிறகு மூன்று மாத காலம் நீங்கலாக மற்ற நாட்கள் தாங்கள் ஜாமீனிலேயே இருந்திருப்பதாகக் கூறி, சுப்ரீம் கோர்ட் அப்பீல் பைசல் செய்யப்படும் வரை தாங்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்படலாம் என்று கோரினர்.
ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் அப்பீலை விசாரணைக்கு அனுமதித்த சுப்ரீம் கோர்ட், ஜாமீனில் விடமுடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்திருப்பதாகக் கூறினர். அந்த கோர்ட்டின் மறு உத்தரவு கிடைக்கும் வரை மனுதாரர்களை ஜாமீனில் விட யுக்தானுசாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை வியாக்கியானம் செய்யக் கூடிய நிலைமையில் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.