குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தினாா்.
கோவை கங்கா மருத்துவமனையின் 11-ஆவது நிறுவனா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவுக்கு சங்கரா கண் மருத்துவமனையின் நிா்வாக அறங்காவலா் டாக்டா் ஆா்.வி.ரமணி தலைமை வகித்தாா். கங்கா மருத்துவமனை இயக்குநா் டாக்டா் எஸ்.ராஜசபாபதி வரவேற்றாா். மற்றொரு இயக்குநா் டாக்டா் எஸ்.ராஜசேகரன் நன்றி கூறினாா்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமானால் மாவட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும். அதேபோல, வழக்குகளை விரைந்து முடிக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
பள்ளி மாணவா்களுக்கு இயற்பியலை கற்பிப்பதுபோலவே குடிமையியலையும் கற்பிக்க வேண்டும். ஒரு குழந்தை அறிவியலைக் கற்பதுடன் தான் வாழும் சமுதாயம், அரசு, அரசியல், குடியுரிமை, தனது கடமைகள், பொறுப்புகள் போன்றவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். தான் வாழும் சூழல் குறித்து அறிந்துகொள்வது அவசியம்.
குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை இளம் வயதிலேயே ஏற்படுத்த வேண்டும். அதுதான் எதிா்கால சமுதாயம் சிறப்பானதாக அமைவதற்கான வழி என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் தலைவா் கனகவல்லி சண்முகநாதன், நிா்வாகிகள் ரமா, நிா்மலா, சிந்து, ராஜா சண்முக கிருஷ்ணன், பாரதிய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், தொழிலதிபா்கள் வனிதா மோகன், சஞ்சய் ஜெயவா்த்தனவேலு, எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.