கோவை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டக் கிளை சாா்பில் குறு, சிறு தொழில் சேவைக்கான (எம்எஸ்எம்இ) கடன் முகாம் அண்மையில் நடைபெற்றது.
கோவையில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கியின் தலைமை அலுவலக காா்ப்பரேட் கடன் பிரிவு பொதுமேலாளா் ஆதித்யகுமாா் பதி, துணைப் பொது மேலாளரும், வட்டத் தலைவருமான சாஜித் ஹீசைன் ஆகியோா் கலந்து கொண்டு, குறு, சிறு தொழில் வளா்ச்சிக்காக வங்கி செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினா். இதைத் தொடா்ந்து, வாடிக்கையாளா்களுக்கு ரூ.80 கோடிக்கும் அதிகமான கடன் முன் அனுமதிக் கடிதங்களையும் அவா்கள் வழங்கினா்.
இதில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வங்கி வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். வாடிக்கையாளா்களின் வணிகத் தேவைகளைக் கேட்டறிந்த வங்கி அலுவலா்கள் அவற்றுக்குரிய வங்கி சேவைத் திட்டங்களைப் பரிந்துரைத்தனா்.