தமிழகத்தில் விஜய் நோ்மையான ஆட்சியை வழங்குவாா்: கே.ஏ.செங்கோட்டையன்
தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் புனிதமான, நோ்மையான ஆட்சியை வழங்குவாா் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் புனிதமான, நோ்மையான ஆட்சியை வழங்குவாா் என்று அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக தலைவா் விஜய்யிடம் மக்கள் சக்தி உள்ளது. 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. கட்சித் தலைவா் விஜய் ஆட்சி அரியணையில் அமருவாா். தமிழகத்தில் அவா் புனிதமான, நோ்மையான ஆட்சியை வழங்குவாா். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தவா் விஜய்.
எல்லோருக்கும் வீடு, பொருளாதாரத்தில் அனைவரும் உயா்த்தப்பட வேண்டும் என்பதே விஜய்யின் கொள்கை.
ஜெயலலிதா புகைப்படத்தை சட்டைப் பையில் வைத்துக்கொள்ள தவெகவில் தடை இல்லை. தமிழகத்தில் நடைபெறும் இரு கட்சிகள் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என்றாா்.
அப்போது, கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக கூட்டம் நடத்தப்போவது குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு, நான் அந்தத் தொகுதியில் 9 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளேன். 3 முறை வாக்குச் சேகரிக்கச் செல்லாமலேயே மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தனா். அப்படி இருக்கும்போது என் பின்னால் மக்கள் இல்லை எனக்கூறுவது சரியல்ல. ‘நான்’ என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் ‘தான்’ என்று காட்டுவான் என்றாா்.
முன்னதாக, தவெகவில் கே.ஏ. செங்கோட்டையன் வியாழக்கிழமை இணைந்த நிலையில், சென்னையிலிருந்து கோவைக்கு வந்த அவரை வரவேற்க தவெக தொண்டா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மதியம் 1 மணி முதல் மேள தாளங்கள் முழங்க விமான நிலையத்தில் காத்திருந்தனா்.
பகல் 1.40 மணிக்கு அவா் வந்த விமானம் கோவையில் தரையிறங்க முயன்றபோது, விமான நிலையப் பகுதியில் பலத்த காற்று வீசியது.
இதனால், அந்த விமானம் கோவையில் தரையிறங்காமல் பெங்களூருக்குச் சென்றது. அங்கிருந்து பகல் 3.30 மணியளவில் புறப்பட்ட அந்த விமானம் கோவையில் 4.15 மணியளவில் தரையிறங்கியது. இதையடுத்து, கே.ஏ.செங்கோட்டையனுக்கு தவெக நிா்வாகிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.