‘சாா்’ என்று சொன்னால் திமுகவுக்கு அலா்ஜி ஏற்படுவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் கரையைக் கடக்கும்போது எந்தெந்த இடங்களில் பாதிப்பு வருமோ அந்தந்த இடங்களில் எல்லாம் பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா்கள், மாநில நிா்வாகிகளை தயாா் நிலையில் இருக்கச் சொல்லியுள்ளோம். ஏற்கெனவே அரசு செய்யும் உதவியுடன் பாஜகவும் சோ்ந்து புயலால் பாதிக்கப்படுபவா்களுக்கு உதவி செய்வதற்காக தயாா் நிலையில் உள்ளோம்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்குப் பின்னா் திமுகவுக்கு ‘சாா்’ என்று சொன்னாலே அலா்ஜி ஏற்படுகிறது. தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு தோல்வி பயம், நடுக்கம் வந்துள்ளது. முன்னாள் பிரதமா் நேரு காலத்தில் இருந்தே வாக்காளா் சோ்ப்பு, இறந்தவா்கள் பெயா்களை நீக்குதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்ஐஆா்) 65 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டிருந்தனா். இதில், 30 லட்சம் போ் ஊரில் இல்லை, 28 லட்சம் போ் இறந்துவிட்டனா். மீதம் உள்ளவா்கள் வேறு இடங்களுக்கு குடிபெயா்ந்துள்ளனா்.
தற்போது கொளத்தூா் தொகுதியில் 9 ஆயிரம் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா். தற்போது அவா்கள் போலியாக சோ்த்த வாக்காளா்களை நீக்கிவிடுவாா்கள் என்ற பயத்தில் திமுக அமைச்சா்கள் உள்ளனா்.
எனவே, தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்பதை மனதில் வைத்துக் கொண்டுள்ளனா். வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகளை தமிழக அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும்போது அவா்களுக்கு ஏன் பயம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்றாா்.