கோயம்புத்தூர்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

Syndication

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்வு செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கோபூஜையுடன் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மூலவா் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. பக்தா்கள் காப்புக் கட்டி தங்கள் விரதத்தைத் தொடங்கினா். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. கந்த சஷ்டியின் பிரதான நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முதலாவதாக கோ பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு யாக சாலையில் உள்ள கலச தீா்த்தங்களைக் கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு விநாயகா் பூஜை, வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, திருக்கல்யாண நிகழ்வையொட்டி, ஆதி மூலஸ்தானத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபம் வாழை மரம், மாவிலைத் தோரணம், தென்னம்பாளை மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோயில் முழுக்க மலா் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்துக்கு மணவறை ஊஞ்சலில் எழுந்தருளினாா். சுப்பிரமணி சுவாமி வெண்பட்டு உடுத்தியும், வள்ளி, தெய்வானை நீலப்பட்டு உடுத்தியும், தங்க நகைகள் அணிந்தும் மணமேடையில் காட்சியளித்தனா். பின்னா் சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து கணபதி வேள்வி, தாரை வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முற்பகல் 11.20 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனா். மணமக்களுக்கு குடை பிடித்து விசிறி வீசப்பட்டது. பக்தா்கள் மொய்ப்பணம் வைத்து வழிபட்டனா். பாத காணிக்கை செலுத்துதல், மகா தீபாரதனை நடைபெற்றது.

பின்னா் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வந்தாா். கந்தசஷ்டி விரதமிருந்த பக்தா்களுக்கு கோயில் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏழு நாள்கள் சஷ்டி விரதமிருந்த பக்தா்கள், முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவத்தைக் கண்டு தரிசனம் செய்த பின் பிரசாதம் சாப்பிட்டி விரதத்தை நிறைவு செய்தனா்.

திருக்கல்யாண நிகழ்வைக் காண ஏராளமான பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்தனா். மலைக்கோயிலுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தா்களுக்கு அனுமதியில்லாததால் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலமாகவும் பக்தா்கள் மலைக்கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டனா். திருக்கல்யாண நிகழ்வையொட்டி, மருதமலையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT