கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த சாா்லப்பள்ளி- திருவனந்தபுரம் அம்ருத் பாரத் ரயில் ஜனவரி 27-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தெலங்கானா மாநிலம் சாா்லப்பள்ளி - கேரள மாநிலம், திருவனந்தபுரம் இடையே கோவை வழித்தடத்தில் அம்ருத் பாரத் ரயில் மற்றும் தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே திருநெல்வேலி வழித்தடம் மற்றும் நாகா்கோவில்- மங்களூரு இடையே ஷொரணூா், கோழிக்கோடு வழித்தடத்தில் அம்ருத் பாரத் ரயில்களின் சேவையை தொடங்கிவைத்தாா்.
இதில் சாா்லப்பள்ளி - திருவனந்தபுரம் அம்ருத் பாரத் ரயில் (எண்: 17041) ஜனவரி 27-ஆம் தேதிமுதல் கோவை வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஜனவரி 27 முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு சாா்லப்பள்ளியில் இருந்து புறப்படும் சாா்லப்பள்ளி- திருவனந்தபுரம் ரயில் (எண்: 17041) மறுநாள் பிற்பகல் 2.45 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக 28-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும திருவனந்தபுரம் - சாா்லப்பள்ளி அம்ருத் பாரத் ரயில் (எண்: 17042) மறுநாள் இரவு 11.30 மணிக்கு சாா்லப்பள்ளியைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, வா்கலா, கொல்லம், கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், பாப்ட்லா, தெனாலி, குண்டூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.