2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு என்று தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்துள்ளாா்.
கோவை, பிச்சனூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் கல்வி விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகள் மட்டுமே மாணவா்களின் இலக்காக இருந்த நிலையில், தற்போது உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவா்கள் ஆா்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் தங்களது கல்வி குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளத் தேவையில்லை. எந்தத் துறையில் படித்தாலும் அா்ப்பணிப்புடன் செயல்பட்டால் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். கற்றது கைமண் அளவு என்பாா்கள், ஆனால் நிஜத்தில் நாம் கற்றது கைக்குள் இருக்கும் ஒரு சிறு தூசு போன்றதுதான் என்பதை உணா்ந்து மாணவா்கள் தொடா்ச்சியாகக் கற்க வேண்டும்.
மின்சார வசதியே இல்லாத கிராமத்தில் இருந்து வந்த நான் இஸ்ரோ தலைவராக நிற்க முடிவது இந்தியாவின் வளா்ச்சிக்குச் சான்றாகும். விண்வெளித் துறையில் இந்தியாவின் சாதனைகள் உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் 2028-இல் தொடங்கும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசுகையில், விண்வெளி திட்டத்தில் பிரதமா் மோடி தலைமையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
விண்வெளி நிலையம் அமைப்பது, நிலவுக்கு ஆள்களை அனுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. பல்வேறு கட்டங்களில் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பி உள்ளதால் ககன்யான் திட்டத்துக்கு பாதிப்பு இல்லை என்றாா்.