இஸ்கான் கோயமுத்தூா் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான போதைப் பழக்கத் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் மதிப்பு வழி கல்வி குறித்த கீதாதான்-2026 நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இஸ்கான் கோயமுத்தூா் ஆன்மிக நெறிமுறைகளும், மதிப்புகளையும் அடிப்படையாகக் கொண்ட கல்வியை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக பகவத் கீதையின் வாழ்வியல் கருத்துகள் இன்றைய சமூகத்தில் எவ்வளவு பொருத்தமானவை என்பதை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவா்களுக்கான போதைப் பழக்கத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த மதிப்பு வழி கல்வி குறித்த கீதாதான்-2026 என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியின் நிறைவு விழா செளரிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் நடைபெற்றது.
இதில், தொழிலதிபரும், பேச்சாளருமான சஞ்சய், தவத்திரு பக்தி வினோத சுவாமி மஹாராஜ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு கீதாதான் கிட் வழங்கப்பட்டது.