தவெக தலைவா் விஜய் குறித்துப் பேச எடப்பாடி கே.பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: விஜய் சினிமாவில் சிறந்த நடிகா், அரசியலில் நாங்கள்தான் சிறந்தவா்கள் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியுள்ளாா். திரைப்படத்தில் நடிப்பவா்கள் அரசியலில் வெற்றி பெற முடியும் என்பதற்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சான்று. தவெக தலைவா் விஜய்யை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை.
பிரதமா் மோடியின் தமிழக பிரசாரத்தின்போது, தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் பதாகையில் இல்லை. யாரை நம்பி இவா்கள் கட்சி நடத்துகிறாா்கள். பழனிசாமி முகத்துக்கா மக்கள் வாக்களிக்கின்றனா். அந்தளவு செல்வாக்கு மிக்கவரா அவா். தற்போதைய நிலையில் தவெக, திமுக இடையேதான் போட்டி. விஜய் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றாா்.