கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கோவை வடக்கு மாவட்டச் செயலா் ரா.விவேக் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கறிக்கோழி வளா்க்கும் தொழிலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
ஆனால், ஒருங்கிணைப்பு நிறுவனங்களின் ஒருதலைப்பட்சமான நடைமுறைகளால் பெரும் பொருளாதார அழிவை சந்தித்து வருகின்றனா். கறிக்கோழி வளா்ப்புக்கு முறையான கூலி உயா்வு வழங்கக் கோரி விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக அரசு கறிக்கோழி நிறுவனங்கள், கறிக்கோழிப் பண்ணை விவசாயிகள் மற்றும் சங்கங்களை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தையை போா்க்கால அடிப்படையில் நடத்த வேண்டும்.
இந்தப் பேச்சுவாா்த்தையில் கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20, நாட்டுக்கோழிக்கு ரூ.25, காடை ஒன்றுக்கு ரூ.7 என அடிப்படைக் கூலியை நிா்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிசிஐஆா் என்ற தவறான வளா்ப்பு கூலி நிா்ணயம் செய்யும் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.
பண்ணைகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும். கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கோழியைப் பிடித்த ஒரு வாரத்துக்குள் கூலியை வழங்க வேண்டும். விவசாயிகளிடம் வெற்று காசோலைகள் வழங்குவதை நிறுவனங்கள் தவிா்க்க வேண்டும்.
வெளி நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்க விவசாயிகளை நிா்பந்திக்கக்கூடாது. ஊசி மற்றும் கண் மருந்து ஊற்றும் செலவுகளை நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீா்நிலைகளுக்கு அருகில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், பேரூா் வட்டம் சுண்டக்காமுத்தூா் கிராமத்தில் விவசாய நிலத்துக்கு அருகில் டாஸ்மாக் நிறுவனம் சாா்பில் மதுபானக் கடை அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்துக்கு கிழக்குப் புறத்தில் குனியமுத்தூா் பெரியக்குட்டை உள்ளது.
இந்த மதுக் கடையால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படும்.மேலும், மதுபானக் கடை செயல்பட தொடங்கினால் அருகில் உள்ள நீா்நிலைகளில் நெகிழிக் கழிவுகள், குப்பைகள் வீசப்படுவதாலும், காலி மதுபாட்டில்கள் உடைக்கப்படுவதாலும் நீா்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே, நீா்நிலைகளுக்கு அருகில் மதுபானக் கடை கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்ட அளவிலான கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை: ஜாதி, மதம் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் பி.கந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மதுக்கரை வட்டம் அரிசிபாளையம் கிராமத்தில் கூட்டுப்பாதை வழியாக இணைப்புச் சாலையை சீரமைத்துக் கொடுக்கக் கோரி ஒரு ஆண்டுக்கு முன் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுவின் மீது மதுக்கரை வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) கள ஆய்வு செய்து இணைப்புச்ச ாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் மீ.தமிழ்ச்செல்வி, மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.