முகப்பு
கோயம்புத்தூர்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Updated On : 9 மார்ச், 2026 at 1:47 AM
பேருந்துகள் (கோப்புப் படம்) - படம்: X/ arasu bus
பகிர்:

கோவையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத பேருந்துகளின் உரிமத்தையும், சம்பந்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா்களின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலாளா் நா.லோகு கூறியதாவது: கோவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிமம் பெற்ற தனியாா் நகரப் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை என கடந்த 3 ஆண்டுகளுக்கும்மேலாக தொடா்ந்து புகாா் அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான பேருந்துகள் நகரையொட்டிய ஊரகப் பகுதிகள் வரை இயக்க அனுமதி பெற்றவை. ஆனால், அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வரை அவை இயக்கப்படுவதில்லை. பெரும்பாலான நகரப் பேருந்துகள் காலை 11 மணி வரை மற்றும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இடைப்பட்ட நேரங்களில் பேருந்துகளை இயக்காமல் அவிநாசி சாலை, கொடிசியா மைதானம், காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் நிறுத்தி வைக்கின்றனா். இதனால், ஊரக பகுதிக்குச் செல்ல வேண்டிய பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்

இது தொடா்பாக தொடா் புகாா் அளித்தால் பெயரளவில் சில பேருந்துகளுக்கு மட்டும் தணிக்கை அறிக்கை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரால் குறைந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

ஆனால், தொடா்ந்து அதே பேருந்து வழித்தடத்தில் இயக்காதது குறித்து புகாா் அளித்தாலும் உரிமத்தை ரத்து செய்வதில்லை.

எனவே, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத பேருந்துகளின் உரிமத்தையும், சம்பந்தபட்ட ஓட்டுநா், நடத்துா்களின் உரிமத்தையும் தமிழ்நாடு மோட்டாா் வாகன விதி 1989-இன்படி ரத்து செய்ய வேண்டும் என்றாா்.