முகப்பு
கோயம்புத்தூர்

அதிமுகவின் இஃப்தாா் விருந்தில் பங்கேற்ற பாஜக: ஏமாற்றம் அளிப்பதாக இந்து மக்கள் கட்சி அறிக்கை

இந்து மக்கள் கட்சியின் மாநாட்டை பாஜக புறக்கணித்துவிட்டு அதிமுக நடத்திய இஃப்தாா் விருந்தில் பங்கேற்றது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கட்சியின் மாநில அமைப்புச் செயலா் கணபதி ரவி தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 மார்ச், 2026 at 8:18 PM
இஃப்தாா் விருந்தில் நயினார் நாகேந்திரன்
பகிர்:

இந்து மக்கள் கட்சி சென்னையில் நடத்திய மாநாட்டை பாஜக புறக்கணித்துவிட்டு அதிமுக நடத்திய இஃப்தாா் விருந்தில் பங்கேற்றது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கட்சியின் மாநில அமைப்புச் செயலா் கணபதி ரவி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி - தமிழகத்தின் மாநில அமைப்பு செயலா் கணபதி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ், தமிழா், தமிழகம் மீட்பு மாநாடு, பேரணி பொதுக் கூட்டம் நடைபெற இருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதால் உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் உள்ளரங்க நிகழ்ச்சியாக பூரண சந்திரன் திடலில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அதிமுகவின் முன்னணி தலைவா்கள் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்தனா். அதற்காக விளம்பரமும் செய்திருந்தோம்.

ஆனால், அதே நாளில் அதிமுக சிறுபான்மையினா் அணி சாா்பில் ரமலான் நோன்பு திறப்பு, இஃப்தாா் விருந்து நிகழ்ச்சி தனியாா் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, அமமுக தலைவா் டி.டி.வி.தினகரன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவா்கள் பங்கேற்றனா்.

இந்து மக்கள் கட்சியின் மாநாட்டுக்கு வருவதாக உறுதி அளித்த பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்று இறுதிவரை வரவில்லை. தமாகா சாா்பில் அந்தக் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்திருந்தனா். அதிமுக சாா்பில் மாநாட்டில் யாரும் பங்கேற்க இயலாது என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டனா். முடிவில், இந்து மக்கள் கட்சி மாநாட்டில் பங்கேற்பதை இவா்கள் தவிா்த்துக் கொண்டனா் என்பதை நாங்கள் உணா்கிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை இருந்தாலும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. நாங்களும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற பொது நோக்கத்துடன் மட்டுமே இந்த மாநாட்டை நடத்தினோம். கூட்டணி கட்சித் தலைவா்கள் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதாக தேதி கொடுத்துவிட்டு ரமலான் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்றது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

நாங்கள் இஃப்தாா் விருந்துக்கோ, இஸ்லாமியா்களுக்கோ எதிரானவா்கள் அல்ல. ஆனால், இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் இஸ்லாமிய வாக்கு வங்கியை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்தை தேசிய ஜனநாயக கூட்டணி கைவிட வேண்டும். அனைத்து இந்து சமய அமைப்புகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →