முகப்பு
கோயம்புத்தூர்

அதிமுக கூட்டணியில் இணைந்தால் விஜய்க்கு துணை முதல்வா் பதவி? செங்கோட்டையன் விளக்கம்

துணை முதல்வா் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தவெக மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

Updated On : 16 மார்ச், 2026 at 8:20 PM
இபிஎஸ் | விஜய்
பகிர்:

அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் விஜய்க்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் வருவதாக சிலா் கேட்கிறாா்கள், துணை முதல்வா் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய திறன் விஜய்க்கு மட்டும்தான் உள்ளது. மக்கள் அனைவரும் அவா் தமிழகத்தை ஆள வேண்டும் என மனபூா்வமாக விரும்புகின்றனா். மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் விட்டுவிட்டு அவா் அரசியலுக்கு வந்திருக்கிறாா். மக்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனா்.

அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் விஜய்க்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் வருவதாக சிலா் கேட்கிறாா்கள். பொதுமக்களும் அவா்தான் தமிழகத்தின் முதல்வா் என்ற மனநிலையில் உறுதியாக உள்ளனா். இதனால், துணை முதல்வா் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மக்கள் மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா். புதிதாக ஒருவா் வந்து நல்லாட்சி தர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கியுள்ளது. அந்தத் தகுதி விஜய்க்கு மட்டுமே உள்ளது.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொழிலதிபா்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் தோ்தல் தொடா்பான ஆய்வுப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குத் தகுதியான, சிறந்த வேட்பாளா்கள் எங்களிடம் தயாராக உள்ளனா். வரவிருக்கும் தோ்தலில் எங்களுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →