முக்கியத்துவம் வழங்கப்படாமல் அழிந்துவரும் சிறுத்தை இனம்
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை கண்டறிய தனியாக கணக்கெடுப்பு நடத்துவது போன்று, சிறுத்தைகளுக்கும் தனியாக கணக்கெடுப்பு
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை கண்டறிய தனியாக கணக்கெடுப்பு நடத்துவது போன்று, சிறுத்தைகளுக்கும் தனியாக கணக்கெடுப்பு நடத்தி பாதுகாக்கவேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் 16 வகை பூனை இனங்கள் உள்ளன. இதில் பெரிய பூனை இனத்தில் சிறுத்தையும் ஒன்று. காப்புக்காடுகளிலும், வனப்பகுதிகளிலும், மகாராஷ்டிரம் போன்ற இடங்களில் தனியார் தோட்டங்களிலும் இவை பரவலாக காணப்படுகின்றன.
கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த சிறுத்தைகள், தற்போது பத்தாயிரத்துக்கும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த எண்ணிக்கை துல்லியமானது அல்ல. ஏனென்றால் இதுவரை சிறுத்தைகளுக்கு என்று தனியாகக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஒரு அனுமானத்தின் அடிப்படையிலேயே இது கூறப்படுகிறது. வனத்துறையிலும் துல்லியமான கணக்கீடு இல்லை என்பதே வருத்தமான தகவல்.
தமிழக அரசின் மானியக்கோரிக்கை எண் 54-இல், 2011-2012-ஆம் ஆண்டில் அப்போதைய வனத்துறை அமைச்சராக இருந்த பச்சைமால் தமிழகத்தில் 244 சிறுத்தைகள் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், இந்த எண்ணிக்கை சரியானதல்ல என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து போனதால், அதற்கு இணையான சிறுத்தையை வேட்டையாடி அதன் உடல் பாகங்களை எடுத்து பதப்படுத்தி மருந்துப்பொருளாக பயன்படுத்துவதற்காக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்தியாவிலுள்ள வனப்பகுதிகளில், சிறுத்தைகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க, வனத்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டாலும், அத்துமீறி வனத்தினுள் நுழைந்து சிறுத்தைகளை வேட்டையாடுவது தொடர்கிறது.
தமிழகத்தில் வால்பாறையிலும், மகாராஷ்டிரத்தில் விதர்பாவிலும், அஸாமில் குவாஹாட்டியிலும், கேரளத்தில் சாலக்குடியிலும் மனித-சிறுத்தை மோதல்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதில், இவை கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன. கடந்த 1994 முதல் 2012 -ஆம் ஆண்டு வரை உள்ள 19 ஆண்டுகளில் 3,802 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.
புலிகளை வேட்டையாடுவது போன்றே விஷம் வைத்தல், துப்பாக்கியால் சுடுதல், விஷம் தடவிய கத்தி, அம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்துதல், கம்பிகளில் சுருக்கு வைத்தல், மின்சாரம் பாய்ச்சுதல், கூண்டு வைத்து பிடித்தல் போன்ற முறைகளில் சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன.
புலிகள் கணக்கெடுப்பு: இந்தியா முழுவதிலும் உள்ள வனப்பகுதிகளில் புலிகளை கணக்கெடுக்கும் பணி 16-ஆம் தேதி தொடங்கி உள்ளது. இது ஒரு வாரம் நடைபெற உள்ளது. வனப்பகுதியின் தன்மை, சூழல், பரப்பளவை பொறுத்து கணக்கெடுப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தனிக்கவனம் தேவை: புலிகள் கணக்கெடுப்பை போன்று சிறுத்தைகளையும் தனியாக கணக்கெடுப்பு நடத்தி, பாதுகாக்க வேண்டும். சிறுத்தைகள் வேட்டையாடுவது பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். மற்ற வன உயிரினங்கள் கணக்கெடுப்பு நடத்தும்போது சிறுத்தைகளின் எண்ணிக்கையை கணக்கிடுவது சரியாக இருக்காது. சிறுத்தைகள் பற்றி தனியான கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் புலிகளை போன்றே சிறுத்தைகளின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு குறைந்துபோகும் ஆபத்து உள்ளது.
இது குறித்து, ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலரும், கள இயக்குநருமான ராஜீவ் கே ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
புலிகள் கணக்கெடுப்பு நாடு முழுவதிலும் நடைபெற உள்ளது. சிறுத்தைகளுக்கு தனியாக கணக்கெடுப்பு இல்லை. ஆனால், புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது சிறுத்தைகள், மற்ற வன உயிரினங்கள் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றார்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வன விலங்கியல்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ரேவதி கூறுகையில், புலிகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் சிறுத்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை. சிறுத்தைகள் பற்றிய தனியான கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை என்றார்.
தமிழ்நாடு பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் கூறுகையில், இந்தியாவில் அதிகமாக வேட்டையாடுப்படும் வனவிலங்குகளில் சிறுத்தையும் ஒன்றாக இருப்பதால் சிறுத்தை இனம் வேகமாக அழிந்துவருகிறது. புலிகளுக்கு வழங்கப்படுவது போன்று சிறுத்தைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்றார்.